17 people injured by sallikattu
புதுக்கோட்டை
புதுக்கோட்டியில் நடந்த சல்லிக்கட்டில் அடங்காத காளைகள் முட்டியதில் 17 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில், 4 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ளது வானக்கன்காடு. இங்குள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று வாடிவாசல் அமைக்கப்பட்டு சல்லிக்கட்டு நடைப்பெற்றது.
சல்லிக்கட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ராமசாமி தொடங்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோகநாதன் முன்னிலை வகித்தார்.
முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கரூர் சிவகங்கை, திண்டுக்கல், இராமநாதபுரம் உள்பட்ட பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட 652 காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.
அப்போது சீறிப் பாய்ந்த காளைகளை, 116 மாடுபிடி வீரர்கள் போட்டிப் போட்டு அடக்கினர்.
இதில் சில காளைகள் மாடு பிடிவீரர்களை தூக்கி வீசியது. இதில் 17 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் நான்கு பேர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னர் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள் உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த சல்லிக்கட்டை புதுக்கோட்டை, வடகாடு, கீரமங்கலம், ஆலங்குடி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.
