செங்குன்றம் அருகே 15 வயது பள்ளி மாணவியை கடத்தி, திருமணம் செய்தவரும், அவருக்கு உடந்தையாக இருந்தவரையும் காவலாளர்கள் கைது செய்தனர். பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தை அடுத்த புழல் காவாங்கரையில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு வசிக்கும் 15 வயது மாணவி, செங்குன்றத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், அதே முகாமில் வசிக்கும் மையேந்திரன் (22), கடந்த சில மாதங்களாக மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த வாரம் மையேந்திரன், மாணவியை கடத்திச் சென்று, திருமணம் செய்துக் கொண்டதாக தெரிகிறது. பின்னர், இருவரும் வேறொரு பகுதியில் ஒரு வாரமாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், மாணவியை காணவில்லை என அவரது தாயார் மரியா, புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இதையடுத்து, மாணவியை மீட்டு, அவரது தாயாரிடம் காவலாளர்கள் ஒப்படைத்தனர்.
மேலும், அவரைக் கடத்தி திருமணம் செய்த மையேந்திரனையும், அவருக்கு உடந்தையாக இருந்த சந்திரகுமாரையும் (29) காவலாளர்கள் சமீபத்தில் கைது செய்தனர்.
பின்னர், அவர்களை திருவொற்றியூர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, புழல் சிறையில் அடைத்தனர்.
