ஊத்துக்கோட்டையை அடுத்த பூண்டி ஒன்றியத்தில் குடிநீர் இல்லாமல் தவிக்கும் 15-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் குடிநீர் கேட்டு ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆரியத்தூர், ஆரியப்பாக்கம், நயப்பாக்கம், நம்பாக்கம், காலனி, கற்கஞ்சி நகர், தொகுப்பு காலனி, வெங்கம்மாபுரம் கண்டிகை, வெள்ளாத்துக்கோட்டை, கூனிப்பாளையம், கொரக்கந்தண்டலம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

மேற்கண்ட பகுதிகளில், நிலத்தடி நீர் குறைந்து, பாதாளத்திற்கேச் சென்று விட்டது. சுமார் 600 அடிக்கு மேல் ஆழ்த்துளை குழாய்கள் அமைத்து, அதன் மூலம் தண்ணீரை உறிந்து, விவசாயம் நடைபெற்று வருகிறது.

ஆனால், குடிநீருக்காக அதிகபட்சம் 200 அடி மட்டுமே ஆள்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், கிராம மக்கள் குடிநீர் பஞ்சத்தில் சிக்கியுள்ளனர்.

சென்றாயன்பாளையம், வெள்ளாத்துக்கோட்டை ஏரிப் பகுதிகளில் ஆழ்த்துளை கிணறுகள் அமைத்து, அதன்மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு நீர் ஏற்றப்பட்டது.

ஆனால், தற்போது அங்கும் நிலத்தடி நீர் குறைந்துவிட்டதால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள், சுமார் ஒரு கி.மீ. சென்று வயல் வெளிகளில் இருந்து தண்ணீரை எடுத்து வருகின்றனர்.

மேலும், தங்களது பயன்பாட்டுக்கும், கால்நடைகளுக்கும் தண்ணீர் வேண்டி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 25-ஆம் தேதியன்று சேமதேவன்பட்டு, கொரக்கந்தண்டலம் கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.

மேலும், சனிக்கிழமை கூனிப்பாளையம் கிராம மக்கள் பென்னாலூர்பேட்டை - சீத்தஞ்சேரி சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.

பருவமழை பெய்து, பூமி செழிக்க வேண்டும் என பொதுமக்கள் கிராமப்புற கோயில்களில் வழிபாடுகளும் நடத்தி வருகின்றனர்.