கொடநாடு காவலாளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க குன்னூர் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் ஒன்று நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ளது. இந்த எஸ்டேட்டில் காவலாளியாக வேலை பார்த்த ஓம்பகதூர் என்பவர் கடந்த 23 ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.

அப்போது கிஷன் பகதூர் என்ற காவலாளி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக நீலகிரி, எஸ்.பி., முரளி ரம்பா தலைமையில், ஐந்து, டி.எஸ்.பி.,க்கள் அடங்கிய ஐந்து தனிப்படை போலீசார், 10குழுக்களாக பிரிந்து, தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில், தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வழக்கில், முதல் துருப்பாக கிடைத்த, ஒரு மொபைல் போன், கையுறைகள், ரத்தக் கறைகள், சி.சி.டி.வி., கேமரா பதிவுகள் ஆகியவற்றை கொண்டு, மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், பல முக்கிய தகவல்கள் கிடைத்தன.

இந்த வழக்கு சம்பந்தமாக கனகராஜ், சயான் ஆகியோரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

அதில் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். மேலும் சயான் என்பவர் மற்றொரு விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காவலாளி கொலை வழக்கில் போலீசார் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நீலகிரி எஸ்.பி. முரளிரம்பா தெரிவித்தார்.

இந்நிலையில், அவர்கள் 4 பேரும் இன்று குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி 4 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.