தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு கண்டிப்பாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று ஆரம்பம் முதலே பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்து வந்தார்.

அதே போல், ஜனவரி மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா மூன்றாம் அலை மெல்ல மெல்ல குறைய தொடங்கியது. அதன் படி, கொரோனா பரவலை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்து தளர்த்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைகழகங்கள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு எடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, மார்ச் 2 ஆம் தேதி 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. அதன் படி, பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதியும், பிளஸ் 1 பொதுத்தேர்வு மே 9 ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 ஆம் தேதியும் தொடங்கிறது.மேலும், 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில் முதலில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு வருகிற ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை நடைபெறும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அதனுடன், மே 4 ஆம் தேதிக்குள் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு மதிப்பெண்களை முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதி தொடங்கி மே 30 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.