12 special courts have been set up in states including Andhra Pradesh and Karnataka to examine cases against MLAs and MLAs.

எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தமிழகம் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. 

கிரிமினல்கள் அரசியலில் ஈடுபடுவதை தடுக்க கோரி அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்தார். அதில், 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களின் அடிப்படையில், 1,581 பேர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.

இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது. இவர்களில் 10 பேர் மரணமடைந்ததால் அவர்களைத் தவிர 1571 பேர் மீதான வழக்குகளை விரைவில் நடத்தி முடிக்கக்கோரி மனுதாரர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ரஞ்சன் கோகோய் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘‘நாடுமுழுவதும் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு தயாராக உள்ளது. முதல்கட்டமாக நாடு முழுவதும் 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். தேவை ஏற்பட்டால் சூழ்நிலைக்கு ஏற்ப கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தமிழகம் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய அரசுக்கு அனுமதி வழங்கியுள்ளது.