12 to 3 pm until people do not go out to anyone to collector

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இயல்பு நிலையை விட கூடுதலாக வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளதால் நண்பகல் 12 - 3 மணி வரை மக்கள் யாரும் வெயிலில் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சியர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இயல்பு நிலையை விட கூடுதலாக வெப்பம் நிலவும் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது. எனவே, மக்கள் வெப்பத்திலிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும்.

சாறு நிறைந்த பழங்களை அதிக அளவில் உட்கொள்ளவும், தாகம் வரும் வரை காத்திராமல் அடிக்கடி தண்ணீர் பருகவும். அடிக்கடி குளிர்ந்த நீரில் குளிப்பதும் நலம். காற்றோட்டமான மெல்லிய பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வீட்டிலிருந்து வெளியில் செல்லும்போது கண்ணாடி, குடை, காலணி அணிந்து செல்ல வேண்டும், குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும்.

தவிர்க்க இயலாத சூழ்நிலையில் வெளியே செல்லும்போது, குடிநீர் எடுத்துச் செல்வதுடன் தலை, கழுத்து மற்றும் கைகளை சிறிது ஈரமான துணியினால் மூடி செல்ல வேண்டும்.

மோர், அரிசி கஞ்சி, எலுமிச்சை பழச்சாறு மற்றும் லஸ்ஸி ஆகிய குளிர்பானங்களை அருந்த வேண்டும்.

மக்கள் அவசியத் தேவையின்றி வெயிலில் செல்ல வேண்டாம். குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை அதிகமுள்ள திரவங்களைத் தவிர்க்கவும். மிகக் குளிர்ந்த பானங்களை அருந்துவதைத் தவிர்க்கவும்.

குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளை வாகனம் நிறுத்தும் இடங்களில் விட்டுச் செல்ல வேண்டாம்.

கனமான, இறுக்கமான ஆடைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்” என்றுக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.