கோயம்புத்தூர்

கோயம்புத்தூரில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் ரூ.12 இலட்சத்தை திருடி சென்றுள்ளனர். கண்காணிப்பு கேமராவின் ஒயரை துண்டித்து புத்திசாலித்தனமாக தப்பித்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், சுக்கிரவார்பேட்டை பசுவண்ணன் கோயில் அருகே வசிப்பவர் தேவ்ராம். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர் மரக்கடை மில்ரோடு பகுதியில் ஹார்டுவேர்ஸ் நடத்தி வருகிறார். 

நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் வழக்கம்போல ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர். அதன்பின்னர் நேற்று காலை 9.30 மணிக்கு ஊழியர்கள் வழக்கம்போல வேலைக்கு வந்தனர். 

அப்போது கடையின் பக்கவாட்டில் உள்ள கிரில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கடை திறக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் கடை உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். 

விரைந்து வந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தபோது மேஜையில் வைத்திருந்த ரூ.12 இலட்சம் ரொக்கப்பணம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. 

பின்னர், இதுகுறித்த தகவலை துணை காவல் ஆணையருக்கு கொடுத்ததின்பேரில் சம்ப்வ இடத்துக்கு விரைந்து வந்தார் துணை காவல் ஆணையர் பெருமாள். 

பின்னர் விசாரணையை தொடர்ந்த துணை காவல் ஆணையர், "கடையில் திருட வந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் உருவம் பதிவாகி விடக் கூடாது என்பதற்காக ஒயர்களை துண்டித்துவிட்டு திருடிச்சென்றுள்ளனர். 

அதுமட்டுமின்றி கண்காணிப்பு கேமரா காட்சிகளை பதிவு செய்யும் கருவிகளையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

கடைக்கு முன்பகுதியில் உள்ள கிரில் கேட்டை ரம்பத்தால் அறுத்த மர்ம நபர்கள் அதன்பின்னர் உள்பகுதியில் இருந்த கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பணத்தை திருடிச்சென்றுள்ளனர். 

வங்கியில் செலுத்துவதற்கான வைத்திருந்த பணம்தான் திருடுபோய் உள்ளது. எனவே இதை அறிந்த நபர்கள்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம்" என்று கண்டுபிடித்தார். 

அதனைத் தொடர்ந்து கடை ஊழியர்கள் யாருக்காவது இந்தத் திருட்டில் தொடர்பு இருக்குமோ? என்ற கோணத்திலும் காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர். 

பின்னர், திருட்டு நடந்த கடைக்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர். மோப்பநாய் கொண்டு வரப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. 

எப்போதும் ஆள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் திருட்டு நடந்திருப்பதால் அங்கிருக்கும் வியாபாரிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். 

இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து 12 இலட்சத்தை திருடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.