11th day of shuttering in Karataramangalam village people against ONGC
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்த வலியுறுத்தி அநத கிராம மக்கள் ஊரைவிட்டு வெளியேறி காட்டுக்குள் தஞ்சம் புகுந்தனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறுகளை அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குடிநீரில் எண்ணெய் படலம் கலந்துள்ளதாகவும் கூறி அப்பகுதி மக் கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 11 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்தும் கைது செய்யப்பட்ட போராளிகளை விடுவிக்க கோரியும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற கோரியும் கதிராமங்கலத்தில் 11-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
இதைப்போல திருவிடைமருதூர், பந்தநல்லூர், உள்ளிட்ட பல பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில் கதிராமங்கலம் கிராம மக்கள் தங்கள் ஊரில் இருந்து வெளியேறி அங்குள்ள அய்யனார் கோவில் தோப்பில் குடியேறினர். மரங்களில் தங்கள் குழந்தைகளுக்கு தொட்டில் கட்டி தூங்க வைத்தனர். அங்கு விறகு அடுப்பில் சமையல் செய்து சாப்பிட்டு தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
