Asianet News TamilAsianet News Tamil

கோயில் தீ விபத்தில் 11 பேர் உயிரிழப்பு..! நோன்பு திறப்பு நிகழ்ச்சியை ஒத்திவைத்த அதிமுக..

தஞ்சை அருகே உள்ள அப்பர் மடம் கோயில் திருவிழாவில் தேர் மீது மின்கம்பி உரசியதில் 11 பேர் இறந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிமுக, இன்று நடைபெறுவதாக இருந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியை ஒத்திவைத்துள்ளது.

11 killed in temple fire  AIADMK postpones Iftar function in Chennai
Author
Tamil Nadu, First Published Apr 27, 2022, 11:48 AM IST

கோயில் திருவிழாவில் விபத்து- 11 பேர் பலி

தஞ்சாவூரில் களிமேடு பகுதியில் உள்ள அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு தேரோட்டம் நடைபெற்றது. அப்போது தேர் மீது உயர்மின் அழுத்த கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்த விபத்தில்  11 பேர் பலியாகினர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது நிலைமை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விபத்து தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த, பிரதமர் மோடி,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இரங்கல் தெரிவித்துள்ளனர். இதே போல தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.

11 killed in temple fire  AIADMK postpones Iftar function in Chennai

அதிமுக இரங்கல்- ரூ.1 லட்சம் நிதி உதவி

இந்தநிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சை மாவட்டம், களிமேடு கிராமத்தில் நேற்று (26.4.2022) இரவு, அப்பர் ஆலயத்தில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் போது தேர் பவனி நடத்தப்பட்ட நேரத்தில், தேரின் மீது மின்சாரம் பாய்ந்து 11 பேர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த வேதனையும் அடைந்திருக்கிறோம். இந்த மன் வேதனைக்குரிய சம்பவத்தில் மேலும் 15 பேர் தீக்காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருவதும் மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.  ஆண்டுதோறும் நடைபெற்று வந்த ஓர் இனிய ஆன்மிக நிகழ்வில் களிமேடு கிராம மக்களுக்கு இவ்வாண்டு மாபெரும் துயரம் ஏற்பட்டிருப்பதை சொற்களால் விவரிக்க இயலாது. இந்த சோக சம்பவத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனப் பிரார்த்திக்கிறோம். மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். இத்தனை பெரிய துயரத்தை சந்தித்திருக்கும் களிமேடு கிராம மக்களுக்குத் தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் தமிழ் நாடு அரசு விரைந்தும், முழுமையாகவும் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

11 killed in temple fire  AIADMK postpones Iftar function in Chennai

நோன்பு திறப்பு நிகழ்வு ஒத்திவைப்பு

இந்த விபத்தில் தங்கள் இன்னுயிரை இழந்துள்ள 11 பேர்களின் குடும்பங்களுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தலா 1 லட்சம் ரூபாயும்; அதே போல், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 15 பேர்களுக்கு தலா 25,000/- ரூபாயும் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று சென்னையில் நடைபெற இருந்த நோன்பு திறப்பு நிகழ்சி, களிமேடு கிராம தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒத்திவைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.  இந்த நிகழ்ச்சி நாளை நடைபெறும் எனவும் அதிமுக சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios