மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் இடிக்கப்படும் நிகழ்ச்சியை, கொட்டும் மழையிலும் ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்க்க சென்றனர்.
சென்னை போரூர் அருகே மவுலிவாக்கம் பகுதியில் ஆபத்தான நிலையில் இருந்த 11 மாடி கட்டிடம் இன்று இடிக்கப்படுகிறது. இதற்காக அப்பகுதியை சுற்றியுள்ள வீடுகளில் வசிக்கும் மக்களை, அப்புறப்படுத்திவிட்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.
இதற்கிடையில் இன்று அதிகாலை முதல் அந்த கட்டிடத்தின் 11 மாடியிலும் உள்ள தூண்களில் வெடிமருந்துகளை பொருத்தும் பணி நடந்து வருகிறது. அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கட்டிடத்தை ரிமோட் மூலம் 5 முதல் 11வது தளம் வரை முதலில் ரிமோட் மூலம் வெடிக்க செய்யப்படும். அடுத்து, தரை தளம் முதல் மற்ற தளங்கள் இடிக்கப்படும். இதற்கு 11 நொடிகள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி, சிஎம்டிஏ அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என ஏராளமானோர் அங்கு ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கட்டிடத்தை இடிக்கும் பணி மதியம் 2 மணிக்கு தொடங்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் லோசான மழை பெய்து வருகிறது. இந்த மழையையும் பொருட்படுத்தாமல், பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அந்த பகுதிக்கு வேடிக்கை பார்க்க சென்றுள்ளனர். சிலர், அந்த கட்டிடத்தை பின்பகுதியில் தெரியும்படி வைத்து, செல்பி எடுத்து கொள்கின்றனர். இதனை அங்கு பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
