கன்னியாகுமரி

சைக்கிள் மரத்தில் மோதியதில் 10–ஆம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். உடன் சென்ற மற்றொரு மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே நல்லூர்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரகுமார். வியாபாரியான இவருடைய மகன் சந்தோஷ் (15). அருமனையில் உள்ள தனியார் பள்ளியில் 10–ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது தோழர் மேல்புறத்தைச் சேர்ந்த பிரவீண் (17). இவர் பிளஸ்–2 மாணவர்.

வீட்டில் இருந்து சந்தோஷ் மானான் காணி பகுதிக்கு சைக்கிளில் புறப்பட்டான். சைக்கிளின் பின்னால் பிரவீண் உட்கார்ந்து இருந்தார். வளைவான பகுதியில் செல்லும்போது சைக்கிள் திடீரென பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்று மரத்தில் மோதியது.

இதில் நிலை குழைந்த இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து, அவர்களை திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 

அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார். பிரவீணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.