106 degree hot in chennai

சென்னையில் 106 டிகிரி அளவில் கடும் வெயில் வாட்டுவதால் மக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் வழக்கத்திற்கு மாறாக சாலை வெறிச்சோடி கிடக்கின்றன.

தமிழகத்தில் கோடை காலம் முன்கூட்டியே துவங்கியதால் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

குறிப்பாக, வேலூர், திருச்சி, சேலம், ஈரோடு, நாகப்பட்டினம், மதுரை, கரூர், சென்னை என பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

சென்னையில் மீனம்பாக்கம், திருப்பத்தூர், பரங்கிப்பேட்டை, பாளையங்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அனல் காற்று வீசியதால் வெப்பநிலையும் 100 டிகிரியை தாண்டியே காணப்பட்டு வருகிறது.

கடந்த 4 ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்தாலும் சென்னையில் மிகவும் குறைவு என்று தான் சொல்ல வேண்டும்.

ஆங்காங்கே லேசாக மழை பெய்து உள்ளே இருக்கும் வெப்ப சூட்டை வெளியே கிளப்பி விட்டு போய் விடுவதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் அவல நிலை தொடர்கிறது.

சென்னையில் இன்று மட்டும் 106 டிகிரி வெயிலின் தாக்கத்தால் சாலையே வெறிச்சோடி காணப்படுகிறது.

சென்னை சாலைக்கு பேர் போன போக்குவரத்து நெரிசல் என்பது இன்று இது சென்னை சாலை தானா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.