நாகப்பட்டினம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாகையில் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சியினர் இரயில் மறியலில் ஈடுபட்டனர். இதில் 32 பெண்கள் உள்பட 1000 பேரை காவலாளக்ராள் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், அதற்கு அழுத்தம் கொடுக்காத மாநில அரசை கண்டித்தும், உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரியும் தமிழகத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள், மாணவ, மாணவிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி நேற்று நாகை மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் இரயில், பஸ் மறியல் போராட்டம் நடைபெற்றது. நாகையை அடுத்த புத்தூர் இரயில்வே கேட்டில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்தப் போராட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பாண்டியன், காங்கிரஸ் கட்சி நாகை தெற்கு மாவட்ட தலைவர் கனகராஜ், 

நகர தலைவர் ரவிச்சந்திரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் இபுராகிம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் பரிமளசெல்வன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஐயாப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது திருச்சியில் இருந்து வரும் பயணிகள் இரயிலை மறிப்பதற்காக தி.மு.க. கூட்டணி கட்சியினர் காத்திருந்தனர். ஆனால் காரைக்காலில் இருந்து கரூர் செல்வதற்காக சரக்கு இரயில் வந்து கொண்டிருந்தது. 

உடனே அவர்கள் இரயில்வே கேட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரம் சென்று சரக்கு இரயிலை வழியிலேயே மறித்தனர். பின்னர் இரயில் மீது ஏறிநின்று மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். 

இந்த இரயில் மறியல் போராட்டத்தால் இரயில்வே கேட் மூடப்பட்டதால் நாகை - வேளாங்கண்ணி சாலையிலும் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 32 பெண்கள் உள்பட 1000 பேரை காவலாளர்கள் கைது செய்து அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.