Asianet News TamilAsianet News Tamil

100 சதவீதம் கடையடைப்பு; அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி...

100 percent shops closed in krishnagiri State buses are not operated passengers affected
100 percent shops closed in krishnagiri State buses are not operated passengers affected
Author
First Published Apr 6, 2018, 8:48 AM IST


கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் 100 சதவீதம் கடையடைப்பு போராட்டம் நடந்ததால் தமிழக அரசு பேருந்துகள் கர்நாடக மாநில எல்லையில் நிறுத்தப்பட்டதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

மத்திய அரசை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் இரயில் மறியல், சாலை மறியல், ஆர்ப்பாட்டங்கள், முற்றுகைகள் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டன. அதுமட்டுமின்றி முழு கடையடைப்பு போராட்டமும் நடைப்பெற்றது. 

அதன்படி, நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலும் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைப்பெற்றன. ஓசூரில் 100 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

கர்நாடக மாநிலத்தில் இருந்து 160 கர்நாடக மாநில அரசு பேருந்துகள் பெங்களூருவில் இருந்து ஓசூர், கிருஷ்ணகிரி, சேலம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. 

நேற்று தமிழகத்தில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தால் கர்நாடக அரசு பேருந்துகள் தமிழகத்திற்கு இயக்கப்படவில்லை. நேற்று முன்தினம் இரவு 10 மணியுடன் கர்நாடக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

அதேபோல தமிழக அரசு பேருந்துகள் தமிழக - கர்நாடக மாநில எல்லையான ஓசூர் ஜூஜூவாடியுடன் நிறுத்தப்பட்டன. இதனால் ஓசூரில் இருந்து கர்நாடகாவிற்கு சென்ற ஆயிரக்கணக்கான பயணிகள் அங்கிருந்து அத்திப்பள்ளி வரை நடந்து சென்று பின்னர் அம்மாநில பேருந்துகளில் சென்றனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

ஓசூரில் ஒரு சில நகர பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. மேலும், பெங்களூருவுக்கு இயக்கப்படும் தமிழக அரசு பேருந்துகள் ஓசூர் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதிகளவில் பேருந்துகள் இயக்கப்படாததால் நேற்று ஓசூர் பேருந்து நிலையமே வெறிச்சோடியது. 

இந்த முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் தடுக்க ஓசூர் ஜூஜூவாடி, அத்திப்பள்ளி பகுதியில் தமிழக - கர்நாடக மாநில காவலாளர்கள் பாதுகாப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios