திருச்சி அருகே நாளை திருமணம் நடக்க இருந்த ஆசிரியையின் திருமணம், 100 சவரன் நகையை வரதட்சணையாக கொடுக்காததால், திடீரென நின்றது. இதுதொடர்பாக போலீசார், வாலிபரை கைது செய்தனர். திருச்சி பியூர் செம் புராடக்ட்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக இருப்பவர் மகேந்திரன். இவருக்கும் காட்டூரை சேர்ந்த ஆசிரியை சுகந்தி என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 

மாப்பிள்ளை வீட்டாருக்கு வரதட்சணையாக 50 சவரன் நகையும், ரூ.5 லட்சம் ரொக்கமும் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. கடமந்த ஆகஸ்ட் 22-ம் தேதி இருவீட்டாரும் சேர்ந்து பெண்ணுக்கு முகூர்த்தப்பட்டு எடுப்பதற்கு பிரபல ஜவுளிக்கடைக்கு சென்றனர். அங்கு, தங்களது பெண்ணுக்கு ரூ.30 ஆயிரத்தில் புடவை எடுக்கவேண்டும் என பெண்வீட்டார் கூறியுள்ளனர். ஆனால், ரூ-20 ஆயிரத்தில் மாப்பிள்ளை வீட்டார் முகூர்த்த புடவை வாங்கியுள்ளனர்.

இதனால், இரு வீட்டாருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. திருமணத்திற்கு 2 நாட்களே உள்ள நிலையில் மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாருக்கு திடீரென ஒரு நிபந்தனை விதித்தனர், தனது மகன் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிவதால் 100 சவரன் நகையும், ரூ.5 லட்சம் ரொக்கமும், கூடவே ஒரு காரும் வரதட்சணையாக தர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். 

ஆனால், ஏற்கனவே பேசியது 50 சவரன் தானே என கேட்டபோது, 100 சவரன் கொடுக்காவிட்டால் திருமணம் நடக்காது என்று திட்டவட்டமாக கூறிவிட்டானர். இதனால் நாளை நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதை அறிந்ததும் மாப்பிள்ளை வீட்டார் தலைமறைவாகிவிட்டனர். ஆனால், மணமகன் சிக்கி கொண்டார். அவரை கைது செய்த போலீசார், அவரது குடும்பத்தினரை வலைவீசித் தேடி வருகின்றனர்.