கைக்குழந்தையை பேருந்து நிலையத்தில் தவிக்கவிட்டு மாயமான இளம்பெண்..! விழுப்புரத்தில் பரபரப்பு..!
விழுப்புரம் அருகே பெண் ஒருவர் 8 மாத கைக்குழந்தையை பேருந்து நிலையத்தில் பரிதவிக்கவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
விழுப்புரம் பேருந்து நிலையத்தில் 8 மாத கைக்குழந்தையுடன் இன்று ஒரு இளம்பெண் சுற்றி இருக்கிறார். வெகுநேரமாக சுற்றி வந்த அவர் கட்டண கழிப்பிடத்திற்கு வந்துள்ளார். அங்கு பணியில் இருந்த ஊழியரிடம் குழந்தையை கொடுத்த அப்பெண், குழந்தையை சிறிது நேரம் வைத்திற்குமாறும் கழிவறை சென்று விட்டு வந்து வாங்கிக்கொள்வதாகவும் கூறியிருக்கிறார். கட்டண கழிப்பிட ஊழியரும் குழந்தையை வாங்கி வைத்துள்ளார்.
வெகு நேரமாகியும் கழிவறையில் இருந்து அப்பெண் வெளிவரவில்லை. இதனால் சந்தேகம் கொண்ட ஊழியர் உள்ளே சென்று பார்த்துள்ளார். ஆனால் அங்கு அவர் இல்லை. அருகில் பல இடங்களிலும் அப்பெண்ணை தேடி பார்த்துள்ளார். எங்கும் காணாததால் குழந்தைகள் நல அமைப்பிற்கும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்தார். விரைந்து வந்த காவலர்கள் குழந்தையை மீட்டு காப்பகத்தில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் குழந்தையை கொடுத்துவிட்டு தலைமறைவான அப்பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர். அந்த குழந்தை அவருடையது தானா? அல்லது வேறொருவரின் குழந்தையா? பெற்றோரிடம் இருந்து கடத்தப்பட்டதா? என்கிற கோணத்தில் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 8 மாத கைக்குழந்தையை பேருந்து நிலையத்தில் தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்ணால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.