விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவிற்கு உட்பட்டது கருவேப்பிள்ளைபாளையம் கிராமம். இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்தில் குக்கிராமமாக வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நிர்வாக வசதிக்காக விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து புதியதாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உருவாக்கி அரசு உத்தரவிட்டது. கடந்த மாதம் 26ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடந்த விழாவில் முதல்வர் புதிய மாவட்டத்திற்கான நிர்வாக பணிகளை தொடங்கி வைத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது கருவேப்பிள்ளைபாளையம் கிராமத்தில் ஒரு பகுதி விழுப்புரம் மாவட்டத்திலும் மற்றொரு பகுதி கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் வருகின்றது. கிராமத்தில் இருக்கும் தெருக்கள் வேறு வேறு மாவட்டத்தில் வருவதால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். ஒரே தெருவில் சில வீடுகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சில வீடுகள் விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்றது. அதிலும் குறிப்பாக சில வீடுகளின் முன் பகுதி விழுப்புரம் மாவட்டத்திலும் பின் பகுதி கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் இருக்கின்றது.

குடும்பத்தில் தந்தையின் ரேஷன் கார்டு விழுப்புரம் மாவட்டத்திலும் மகனின் ரேஷன் கார்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் இடம்பெற்றிருக்கின்றன. இதுபோலவே அரசு சான்றிதழ்கள், ஆவணங்கள் போன்ற பலவற்றில் மாவட்டங்கள் மாறி மாறி இருக்கின்றன. இதனால் கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த கிராமத்தில் இருந்து விழுப்புரம் 14 கிலோமீட்டர் தூரத்திலும் கள்ளக்குறிச்சி 100 கிலோ மீட்டர் தூரத்திலும் இருக்கின்றது. ஆகவே கருவேப்பிள்ளைபாளையம் கிராமத்தை பழையபடி விழுப்புரம் மாவட்டத்திலேயே நீடிக்கச் செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.