ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்தவர்கள் ரங்கசாமி(58 ) முருகன்(50 ). இவர்கள் இருவரும் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு ஒரு காரில் இருவரும் புறப்பட்டனர். காரை கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த சாமிநாதன்(37 ) என்பவர் ஓட்டி வந்தார்.

இரவு 2 மணி அளவில் கள்ளக்குறிச்சி அருகே இருக்கும் ஒரு மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் சேலம் நோக்கி தவிடு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னையிலிருந்து வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக லாரியும் காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் கார் பலத்த சேதமடைந்தது. அதில் பயணம் செய்து கொண்டிருந்த ரங்கசாமி மற்றும் முருகன் ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

காரை ஓட்டி வந்த ஓட்டுநர் சாமிநாதன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இந்த விபத்து குறித்து காவல் துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கார் ஓட்டுநர் சாமிநாதனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் உயிரிழந்த ரங்கசாமி மற்றும் முருகன் ஆகிய 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.