கருப்பை வாய் புற்றுநோய்: விழுப்புரத்தில் எச்.பி.வி தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின்!
விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் புற்றுநோய் தடுப்பு பரிசோதனை மையத்தில் எச்.பி.வி தடுப்பூசி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழ்நாட்டில் கடந்த 2014ஆம் ஆண்டில் மட்டும் 6,872 பேர் கருப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2023ஆம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 8,534 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு அளித்த பதிலில் இந்த அதிர்ச்சிகர தகவல் தெரியவந்துள்ளது.
இந்திய அளவில் உத்தரப் பிரதேசத்துக்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் கருப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மத்திய அரசு அளித்த பதிலில், “ஐசிஎம்ஆர்-ன் தேசிய புற்றுநோய் பதிவேடு திட்டத்தின் (என்சிஆர்பி)படி, 2023-ம் ஆண்டில் 3,42,333 பெண்கள் கருப்பை வாய்ப் புற்று நோயின் பாதிப்பில் உள்ளனர். இதில் 45,682 பேர் உத்தர பிரதேசத்திலும், 36014 பேர் தமிழ்நாட்டிலும், 30414 பேர் மகாராஷ்டிராவிலும், 25822 பேர் மேற்கு வங்காளத்திலும், 23164 பேர் பீகார் மாநிலத்திலும் என அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் புற்றுநோய் தடுப்பு பரிசோதனை மையத்தில் எச்.பி.வி தடுப்பூசி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கருப்பை வாய் புற்றுநோய்க்கு மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) முக்கிய காரணமாகும். தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தில் எச்.பி.வி. தடுப்பூசியை நடைமுறைப்படுத்திய நாடுகளின் அனுபவம், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் முந்தைய நிலைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை காட்டியுள்ளது. மனித பாப்பிலோமா வைரசுக்கு தடுப்பூசி போடுவது, உலக சுகாதார நிறுவனத்தின் 2030-ஆம் ஆண்டிற்குள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஒழிக்கும் கொள்கையின் அடித்தளமாக அமையும். எச்.பி.வி. தடுப்பூசி திட்டம் இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் ஏற்கனவே நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் 9 முதல் 14 வயது வரையிலான பெண் குழந்தைகளை உள்ளடக்கும் வகையில் எச்.பி.வி தடுப்பூசி திட்டம் இலவசமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இது போன்ற திட்டத்தை செயல்படுத்துவது இதுவே முதல் முறை ஆகும்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்து குவிப்பு வழக்கு மார்ச் 22ம் தேதிக்கு தள்ளிவைப்பு!
தடுப்பூசியின் நன்மைகள் குறித்து உணர்த்துவதற்காக எச்.பி.வி தடுப்பூசி பற்றிய தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு (IEC) நடவடிக்கைகள் ஏற்கனவே விழுப்புரம் நகரத்தில் உள்ள மருத்துவ நிபுணர்களுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 9 முதல் 14 வயதுடைய ஒவ்வொரு பெண்ணுக்கும் இரண்டு டோஸ் HPV தடுப்பூசியை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். முதல் தடுப்பூசி போடப்பட்ட நாளிலிருந்து 180 நாளன்று அடுத்த தடுப்பூசி போட வேண்டும்.
முதற்கட்டமாக, விழுப்புரம் நகரில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள புற்றுநோய் நிறுவன பரிசோதனை மையத்தில் தகுதியான சுமார் 2,000 சிறுமிகளுக்கு முதல் டோஸ் HPV தடுப்பூசி போடப்படும். பின்னர், மாநில சுகாதாரத் துறை, தேசிய சுகாதாரப் பணி மற்றும் ரோட்டரி சேவை அமைப்புகளின் ஒத்துழைப்புடன், விழுப்புரம் நகரில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளிலும் சாத்தியமான வகையில் படிப்படியாக தடுப்பூசி போடப்படும். இதுபின்னர் மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் உள்ள தகுதியுள்ள பெண் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.