திண்டிவனம் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருநெல்வேலியைச் சேர்ந்த இரும்பு வியாபாரி ஒருவர் தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு டாட்டா சுமோ காரில் சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் அருகே உள்ள பாதிரி என்ற இடத்தில் கார் வந்துக் கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரும்பு வியாபாரி குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர்.

உடனே விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் பள்ளத்தில் கவிழ்ந்து இருந்த கார் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று அதிகாலை நடந்த இந்தக் கோர விபத்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.