திமுக கொடிக்கம்பம் நட்ட போது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த வழக்கு.. ஒப்பந்ததாரர் சிறையில் அடைப்பு..!
விழுப்புரத்தில் மாம்பழப்பட்டு பகுதியில் திமுக நிர்வாகி பொன்குமார் என்பவரின் இல்லத் திருமண விழா கடந்த 20ம் தேதி நடைபெற்றது. அதில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். இவரை வரவேற்பதற்காக மாம்பழப்பட்டு சாலையில் பல்வேறு இடங்களில் திமுக கொடிக்கம்பம் நடப்பட்டு அலங்கார ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
விழுப்புரத்தில் திமுக கட்சி கொடிக்கம்பம் நடும் பணியின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் வழக்கில் பந்தல் ஒப்பந்ததாரர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரத்தில் மாம்பழப்பட்டு பகுதியில் திமுக நிர்வாகி பொன்குமார் என்பவரின் இல்லத் திருமண விழா கடந்த 20ம் தேதி நடைபெற்றது. அதில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். இவரை வரவேற்பதற்காக மாம்பழப்பட்டு சாலையில் பல்வேறு இடங்களில் திமுக கொடிக்கம்பம் நடப்பட்டு அலங்கார ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பந்தல், அலங்காரம் பணியை ஒப்பந்ததாரர் வெங்கடேசன் மேற்கொண்டிருந்தார்.
அப்போது, கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த தினேஷ் (12) என்ற சிறுவன் மின்சாரம் தாக்கி துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்;- பேனர் உள்ளிட்ட ஆடம்பரங்களைத் தவிர்க்குமாறு பலமுறை கண்டிப்புடன் வலியுறுத்தியும் ஆங்காங்கே அத்தகைய செயல்கள் தொடர்வது வருத்தமளிக்கிறது. திமுகவினர் என் வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்றுச் செயல்படுத்த வேண்டும். இனி எந்த உயிரும் போகக் கூடாது. சிறுவனை இழந்த குடும்பத்துக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பள்ளி மாணவனை கட்டாயப்படுத்தி கட்சிக் கொடி கம்பம் நடும் பணிக்கு அழைத்து சென்ற பந்தல் ஒப்பந்ததாரர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார். ஒப்பந்ததாரர் வெங்கடேசன் மீது அஜாக்கிரதையாக வேலையில் ஈடுபடுத்தி இறப்பு ஏற்படுத்துதல் மற்றும் கட்டாயப்படுத்தி வேலையில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்பு வெங்கடேசன் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.