இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தற்போது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் அது வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் இருக்கும் கல்வி நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கி இருக்க அரசு உத்தரவிட்டிருக்கிறது.

அத்தியாவசிய தேவைகள் அன்றி பிற காரியங்களுக்கு மக்கள் வெளிவரக் கூடாது என்றும் அவ்வாறு வருபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. எனினும் விபரீதம் உணராமல் பலர் வீடுகளை விட்டு வெளிவந்து சாலைகளில் சுற்றிய வண்ணம் இருக்கின்றனர். மேலும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தெருக்களில் கிரிக்கெட் விளையாடுவது போன்ற காரியங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை பிடிக்கும் போலீசார் எச்சரிkக்கின்றனர். சில இடங்களில் வழக்கு பதிவும் செய்யப்படுகிறது.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களை பிடித்த காவலர்கள் எச்சரித்து நூதன தண்டனை வழங்கி இருக்கின்றனர். திருக்கோவிலூர் அருகே இருக்கும் கண்டாச்சிபுரத்தில் 15 இளைஞர்கள் ஒன்றுகூடி கிரிக்கெட் விளையாடுவதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. அதன்படி அங்கு விரைந்த போலீசார் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களைப் பிடித்து எச்சரித்தனர். பின் அங்கிருக்கும் கோவில் முன்பாக இனிமேல் மக்கள் நலனுக்காக அரசு அறிவித்திருக்கும் ஊரடங்கு உத்தரவை மீறி வீட்டைவிட்டு வெளியே வரமாட்டோம், விளையாட மாட்டோம் என்று கூறி கோவிலை சுற்றி அங்கப்பிரதட்சணம் செய்ய வைத்து சாமி மீது சத்தியம் பெற்றனர். அதன்பிறகு இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கிய போலீசார் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.