விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே இருக்கிறது ஒழிந்தியாப்பட்டு கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(65). இவரது மனைவி பவுனு(60). சுப்பிரமணிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறது. இதனால் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்துள்ளார். அவரை பார்ப்பதற்காக பவுனுவின் சகோதரி மல்லிகாவும் அவரது கணவரும் வந்துள்ளனர்.

இந்தநிலையில் சுப்ரமணியின் உடல்நிலை மோசமடைந்திருக்கிறது. இதனால் செய்வதறியாது திகைத்த குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸை அழைக்க அவர்களிடம் தொலைபேசி இல்லாமல் இருந்திருக்கிறது. இதனால் தாமதப்படுத்த வேண்டாம் என்று நினைத்த மல்லிகா, செங்கல் அடுக்கி வைக்க பயன்படும் தள்ளுவண்டியில் தங்கையின் கணவரை படுக்க வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். சுத்துக்கேணியில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் காட்டேரிக்குப்பம் மருத்துவமனைக்கு மல்லிகாவும் அவரது கணவரும் சுப்ரமணியை தள்ளுவண்டியில் வைத்து கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலே சுப்பிரமணி இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து உடலை ஊருக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்து தருமாறு மல்லிகா கேட்டுள்ளார். உடனடியாக காட்டேரிக்குப்பம் காவல்துறையினர் உதவியுடன் சுப்ரமணியின் உடல் அவரது சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

சுப்ரமணியை தள்ளுவண்டியில் வைத்து மல்லிகாவும் அவரது கணவரும் கொண்டு வரும்போது வழியில் சிலர் படம்பிடித்து சமூக ஊடகங்களில் பரவ விட்டுள்ளனர். அவர்கள் யாரும் உதவி புரியவில்லை என்று தெரிகிறது. அவர்கள் தொலைபேசி மூலம் ஆம்புலன்ஸை அழைத்திருந்தாலாவது சுப்ரமணி உயிர்பிழைத்திருக்க கூடும். அதை விடுத்து படம்பிடிப்பதில் குறியாக இருந்ததில் ஒரு உயிர் போய்விட்டதே என மனிதநேய ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.