Watch : நீண்ட நாள் பணியாளர் திடீர் பணிநீக்கம்! மாற்றுத்திறனாளிகள் தர்ணா!
விழுப்புரம் மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக பணி செய்து வந்த நபரை எந்தவித முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பாலகிருஷ்ணன் என்ற மாற்றுத்திறனாளி, தேசிய அடையாள அட்டை வழங்கும் பணியை மேற்கொண்டு வந்தார். இவர் என் எல் பி திருச்சி தனியார் நிறுவனத்தின் மூலம் அவுட்சோர்சிங் முறையில் ஊதியம் பெற்று வந்ததாகவும், அவருக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை தொடர்ந்து தாமதம் செய்து கடந்த 9 மாதமாக ஊதியம் கொடுக்காமல் கஷ்ட நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, விழுப்புரம் மாற்றுத்திறனாளி நல அலுவலர் தங்கவேலுவிடம் விழுப்புரம் நகர்புற வாழ்வாதார இயக்கம் மூலம் சம்பளம் பெற்று தருமாறு பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், மாற்றுத்திறனாளி நல அலுவலர் தங்கவேலு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்காமல் பணியில் இருந்து பாலகிருஷ்ணனை பணியில் இருந்தது நீக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, சக பணியாளர்கள்ர பாலகிருஷ்ணனை மறுபடியும் அதே பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்,
இதனை அடுத்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு மாற்றுத்திறனாளி பாலகிருஷ்ணனுக்கு விரைவில் பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்தரவாதம் அளித்ததை அடுத்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.