தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. 

தமிழகத்தில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவைக் காட்டிலும் குறைவாக பொழித்தது. இதனால், அணைகள், ஏரிகளின் நீர்மட்டம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை. அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாத நிலையில், குடிநீருக்கு மட்டுமே விநியோகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில், தமிழகத்தின் குடிநீர் மற்றும் பாசன தேவைகளை பூர்த்தி செய்யும் மேட்டூர், பவானிசாகர், அமராவதி, பெரியாறு, வைகை, பாபநாசம், மணிமுத்தாறு, சாத்தனூர் உட்பட 15 முக்கிய அணைகளின் நீர் மட்டம் வறண்டு வருகிறது. 198 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 15 அணைகளில் 25 டிஎம்சி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. 

அதே நேரத்தில் பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் தமிழகத்தில் 14,098 ஏரிகளில் 10,080 ஏரிகள் முற்றிலுமாக வறண்டு போய்விட்டன என தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 200 ஏரிகளில் 50 சதவீதமும், மீதமுள்ள ஏரிகளில் 25 சதவீதமும் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இந்த நிலையில் குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கு நிலத்தடி நீரை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சமீபகாலமாக நிலத்தடி நீர் பயன்பாடு அதிகரித்துள்ளதன் விளைவாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டு வருகிறது. குறிப்பாக, கடந்த 5 மாதங்களாக நிலத்தடி நீர் பயன்பாடு அதிவேகமாக அதிகரித்ததால் 1 மீட்டர் முதல் 5 மீட்டர் வரை சரிந்துள்ளது. 

கடந்த மே மாதம் நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில் தமிழகம் முழுவதும் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்திருப்பது, அதே நேரத்தில் திருவள்ளூர், நாகை, திருச்சி, தர்மபுரி கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.