உளுந்தூர்பேட்டை அருகே காரும்- பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் உடல்களை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வராததால் மினி லாரியில் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் முத்தமிழ்செல்வன் (35). சென்னையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மேற்படிப்பிற்காக லண்டன் சென்று விட்டு சென்னைக்கு வந்தவர் அங்கிருந்து மனைவி நிஷா(32), மகன் சித்தார்த் (7), மகள் வைஷ்ணவி(1), திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மாமியார் மல்லிகா (70) ஆகியோருடன் ஒரு காரில் நேற்று திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.

காரை முத்தமிழ்செல்வன் ஓட்டினார். மதியம் 12 மணி அளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த வண்டிப்பாளையம் மழை மாரியம்மன் கோயில் எதிரே சென்றபோது, திடீரென கார் டயர் வெடித்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோதி மற்றொரு சாலையில் சென்று கவிழ்ந்தது. அப்போது அந்த வழியாக விழுப்புரம் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மீது மோதியது. இதில் பேருந்தில் அடிப்பகுதியில் கார் சிக்கி அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் முத்தமிழ்செல்வன் உள்பட 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து, ஜேசிபி இயந்திரம் வரழைக்கப்பட்டடு பேருந்தை சாலையோரத்திர் தள்ளி காரை தனியாக பிரித்தனர். அதற்குள் முத்தமிழ்செல்வன், நிஷா, மல்லிகா ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த குழந்தைகள் சித்தார்த் மற்றும் வைஷ்ணவி ஆகியோர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வராததால் மினி லாரியில் கொண்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.