கள்ளக்குறிச்சி அருகே பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த கார் நிலைத் தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அம்மாகுளம் என்ற ஊரைச் சேர்ந்த ஏழுமலை தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக ஒரு மாருதி சுசுகி வாடகை காரில் உறவினர்களுடன் ஈரோடு நோக்கி சென்றுகொண்டிருந்தார். அதிகாலை 6 மணி அளவில் தியாகதுருகம் புறவழிச்சாலையில் கார் அதிவேகமாக சென்ற நிலையில் ஓட்டுனர் சிவகுமார் கண் அசந்து தூங்கியதாக கூறப்படுகிறது. 

இதனால் கார் நிலை தடுமாறி, சாலையில் கவிழ்ந்து உருண்டு 15 அடி ஓடைப் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்துள்ளது. இதில் ஏழுமலை, பாலாஜி, சித்திரா, ஜெயக்கொடி, ஆகிய 4 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஓட்டுனர் சிவக்குமார், சாந்தி ஆகிய இருவர் படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். 

இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 4 பேரின் உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தில் வருகின்றனர்.