ஏசி வெடித்து 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்..!
திண்டிவனத்தில் அதிமுக பிரமுகர் வீட்டில் ஏசி மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி தந்தை, தாய், மகன் ஆகிய 3 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் 3 பேரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் தரப்பில் சந்தேகம் எழுந்துள்ளது.
திண்டிவனத்தில் அதிமுக பிரமுகர் வீட்டில் ஏசி மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி தந்தை, தாய், மகன் ஆகிய 3 பேர் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் 3 பேரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் தரப்பில் சந்தேகம் எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிபாக்கம் சுப்பராயன் தெருவை சேர்ந்தவர் ராஜி (60). வெல்டிங் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். இவரது மனைவி கலைச்செல்வி (52), இளைய மகன் கவுதம் (27). ராஜீ உள்ளிட்ட மூவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் ஏசி அறையில் தூங்கி கொண்டிருந்த போது தீப்பிடித்து எரிந்து மூன்று பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஏசி மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தே உயிரிழப்புக்குக் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் ராஜீ உடலில் ரத்தம் கசிந்தது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்தில் சிக்கி உடல் கருகி உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அவரது உடலில் இருந்து ரத்தம் வழிந்தது எப்படி என்ற கேள்வி எழுந்தது. மேலும் அறைக்கு அருகில் கிடந்த காலி மண்ணெண்ணெய் கேன் போலீசாரின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
சொத்து பிரச்சனைக்காக மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி விட்டு ஏசி மின்கசிவு எனக் சமாளிக்க திட்டம் தீட்டப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உயிரிழந்த ராஜூக்கு, அதிகம் சொத்துகள் இருப்பதும் விசாரணையில் தெரிவந்துள்ளது. இதனிடையே ராஜ், கலைச்செல்வி, கெளதம் ஆகியோரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.