தமிழகத்தில் 2வது கொரோனா பலி..! டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர் மரணம்..!
விழுப்புரத்தைச் சேர்ந்த 50 முதியவர் ஒருவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வந்துள்ளது. அவர் டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பியதாக கூறப்படுகிறது.
இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது தமிழகத்திலும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியான நிலையில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்திருக்கிறது. இன்னும் 400க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டிய நிலையில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் விழுப்புரத்தில் கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்தவர் பலியாகி இருக்கிறார். விழுப்புரம் மாவட்டத்தில் 67 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு விழுப்புரத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான்(51) என்னும் முதியவர் உடல்நலக்குறைவால் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். இதனிடையே இன்று காலையில் அவர் உயிரிழந்த தகவலை சுகாதரத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உயிரிழந்தவர் டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பி உள்ளார். டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு சென்று தமிழகம் திரும்பிய அனைவரையும் பரிசோதிக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பலியானது குறிப்பிடத்தக்கது.