விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இருக்கிறது மயிலம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பாபு. இவரது இரண்டு வயது மகன் ஜெகதீஷ். நேற்று வீட்டின் முன்பாக விளையாடி கொண்டிருந்துள்ளான். வீட்டினுள் அவனது தாய் சமையல் வேலை பார்த்துள்ளார். பாபு வேலை சம்பந்தமாக வெளியே சென்றிருந்தாக கூறப்படுகிறது. அந்தநேரத்தில் அவரது வீட்டின் அருகே வெறி நாய் ஒன்று சுற்றித் திரிந்துள்ளது.

வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை ஜெகதீசை பார்த்து குரைத்த வெறிநாய், திடீரென அவனை கடிக்க தொடங்கியுள்ளது. ஜெகதீஷின் விரலை நாய் கடித்ததில், விரல் துண்டாகும் நிலைக்கு பலத்த காயமடைந்துள்ளது. இதனால் குழந்தை கதறி துடித்துள்ளான். சத்தம் கேட்டு வந்த குழந்தையின் தாய் உடனடியாக அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மயிலம் சுற்றுவட்டார பகுதியில் அதிகளவில் தெரு நாய்கள் சுற்றி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அவற்றில் சில வெறி நாய்கள் இருப்பதாகவும் சாலையில் செல்வோரை அவை விரட்டி சென்று கண்டிப்பதாகவும் கூறுகின்றனர். வெறி நாய் கடித்து தினமும் 5 பேர் வரையில் மயிலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு பெற்று வருவதாக தகவல் வந்துள்ளது. இதனால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் சார்பாக நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.