திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி தனலட்சுமி. வயது 47 . மனோகரன் அவர் வசிக்கும் பகுதியில் சோடா கம்பெனி வைத்து வியாபாரம் நடத்தி வருகிறார். நேற்று தனது இருசக்கர வாகனத்தில் மனோகரன் தனது மனைவியுடன் திருச்சிக்கு சென்றிருந்தார். அங்கு வேலையை முடித்துவிட்டு மதியம் வீட்டிற்கு அவர்கள் இருவரும் திரும்பி கொண்டிருந்தனர். மனோகரன் இருசக்கர வாகனத்தை ஓட்ட தனலட்சுமி அவருக்கு பின்னால் அமர்ந்திருந்தார்.

திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நொச்சியம் அருகே இருக்கும் புதுப்பாலத்தில் அவர்கள் இருவரும் வந்து கொண்டிருந்தனர். அப்போது திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துறையூருக்கு ஒரு தனியார் பேருந்து வந்துகொண்டிருந்தது. புதுப்பாலத்தில் வேகமாக வந்த பேருந்து எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. 

இதில் அதை ஓட்டி வந்த மனோகரனும் அவரது தனலட்சுமியும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். சாலையில் விழுந்த தனலட்சுமி மீது தனியார் பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனோகரன் சில காயங்களுடன் உயிர் தப்பினார். மனைவி தன் கண் முன்னே தலை நசுங்கி இறந்து கிடப்பதை பார்த்து மனோகரன் கதறி துடித்தார்.

அந்த பகுதியாக வந்தவர்கள் இந்த விபத்து குறித்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனியார் பேருந்தின் ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து தமிழக அரசியலில் முக்கிய பதவியில் இருக்கும் ஒரு நபருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

பேருந்து மோதியதில் கணவர் கண்முன்னே மனைவி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.