திருமணத்திற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்து விதவிதமான முறையில் அழைப்பிதழ்களை பலர் அச்சடிப்பார்கள். அவ்வாறு அச்சடிக்கப்படும் அழைப்பிதழ்கள் திருமணம் முடிந்தவுடன் குப்பைக்கு சென்று விடும். சிலர் வாங்கிய உடனேயே திருமண தேதியை குறித்துவிட்டு எங்காவது வீசிவிடுவார்கள். அழைப்பிதழ்கள் பெரும்பாலும் பிளாஸ்டிக் தாள்களிலேயே அச்சடிக்கப்படுவதால் சுற்றுசூழலையும் பாதிக்கிறது.

இந்தநிலையில் இதற்கு மாற்றாக கைகுட்டைகளில் திருமண அழைப்பிதழ்களை அச்சடித்து அசர வைத்திருக்கிறார் ஒரு அரசு அதிகாரி. திருச்சியைச் சேர்ந்தவர் செல்வமதி வெங்கடேஷ். காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் பாலாஜி. இவருக்கு சரண்யா என்கிற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான திருமண  ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அழைப்பிதழ்களை அச்சடித்து காகிதங்களை வீணாக்குவதை விரும்பாத செல்வமதி வெங்கடேஷ், திருமண விபரங்களை கைக்குட்டையில் அச்சடித்து உறவினர்கள்,நண்பர்கள் என அனைவர்க்கும் விநியோகித்து வருகிறார். கைக்குட்டையை அட்டைப்பெட்டிக்குள் வைத்தும் கொடுத்துள்ளார். அதுவும் நகைகளை வைக்கும்படி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வித்தியாசமான நடைமுறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இதுகுறித்து செல்வமதி வெங்கடேஷ் கூறும்போது, எவ்வளவு விலை கொடுத்து அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டாலும் இறுதியில் அவை குப்பைகளுக்கே செல்லும் என்றும் அதற்கு மாற்றாக தான் கைக்குட்டையில் திருமணம் அழைப்பிதழை அச்சடித்ததாகவும் கூறினார். இரண்டுமூன்று முறை துவைத்த பிறகு கைக்குட்டையில் இருக்கும் எழுத்துகள் முற்றிலும் அழிந்துவிடும் என்று கூறிய அவர் அதன் பிறகு வழக்கமான முறையில் அதை பயன்படுத்தலாம் என்றார். மேலும் இந்த புதிய முறை சுற்றுசூழலுக்கு எந்தவகையிலும் பாதிப்பு இல்லாமல் இருக்கும் என்று தெரிவித்தார்.