திருச்சியில் இருக்கும் பாலக்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். வயது 46. இவர் திருச்சியில் இருக்கும் தனியார் கண் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இவரது அண்ணன் மகன் சசிகுமார் (26). கரூரைச் சேர்ந்த இவர் பொறியியல் படிப்பு முடித்து விட்டு வேலை தேடி கொண்டு இருந்திருக்கிறார்.

நேற்று அதிகாலை 2 மணியளவில் கரூர் மாவட்டம் புகளூரில் இருந்து ஒரு காரில் இரண்டு பேரும் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை சசி குமார் ஓட்டி வந்துள்ளார். திருச்சி அருகே இருக்கும் லால்பேட்டை மேம்பாலத்தில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திருச்சியில் இருந்து கரூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று எதிரே வந்தது. 

எதிர்பாராத விதமாக காரும் பேருந்தும் பயங்கரமாக மோதிக்கொண்டன. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. அதில் பயணம் செய்த இருவரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த காவலர்கள் இருவரையும் சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஆனந்தும் சிறிது நேரத்தில் மரணமடைந்தார். ஒரே நேரத்தில் இருவரும் இறந்து போனது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை பேருந்து ஓட்டுநர் சண்முகம் என்பறவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.