கடலூர் மாவட்டம் செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் ராஜா(30). இவரது நண்பர்கள் மணிகண்டன்(28), சதிஷ் குமார்(26) மற்றும் மருத முத்து(30). நான்கு பேரும் வேலை சம்பந்தமாக திருச்சிக்கு சென்றுள்ளனர். பின் மீண்டும் ஊர் திரும்புவதற்காக ஒரு காரில் நேற்று இரவு திருச்சியில் இருந்து கிளம்பினர். 

இன்று அதிகாலையில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே கார் வந்த போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாக சென்ற கார் கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையோரம் இருந்த புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. காரில் பயணம் செய்த மருதமுத்து மற்றும் செந்தில்ராஜா ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மற்ற இருவரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர். அந்த வழியாக சென்றவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்து மீட்டு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உயிரிழந்த இருவரின் உடலையும் கைப்பற்றி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் பாடாலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.