தாய் கண் முன்னே துடிதுடித்து பலியான இரட்டை சகோதரிகள்..! திருச்சியில் பரிதாபம்..!
சிறுமிகள் இருவரும் நேற்று மதியம் தங்கள் தாயுடன் அருகே இருக்கும் குளத்திற்கு குளிப்பதற்காக சென்றனர். அங்கு கண்ணம்மாள் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது தண்ணீரில் இறங்கி சிறுமிகள் விளையாடத் தொடங்கினர்.
திருச்சி மாவட்டம் மருங்காபுரி அருகே இருக்கிறது வேம்பனூர் சங்கம்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் வீரமலை. இவரது மனைவி கண்ணம்மாள். இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள் பிறந்த பிறகு 5வதாக இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். அவர்களுக்கு பெற்றோர் ராமுப்பிரியா, லெட்சுமிப்பிரியா(9) என பெயரிட்டு வளர்த்தனர். சிறுமிகள் இருவரும் அப்பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தனர். தற்போது கொரோனா பரவுதல் காரணமாக மார்ச் 16ம் தேதி முதல் நாடு முழுவதும் இருக்கும் கல்வி நிறுவனங்கள் கால வரையின்றி மூடப்பட்டுள்ளது.
இதனால் இரட்டை சகோதரிகளான ராமுப்பிரியாவும் லெட்சுமிப்பிரியாவும் வீட்டில் இருந்தனர். இந்த நிலையில் சிறுமிகள் இருவரும் நேற்று மதியம் தங்கள் தாயுடன் அருகே இருக்கும் குளத்திற்கு குளிப்பதற்காக சென்றனர். அங்கு கண்ணம்மாள் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது தண்ணீரில் இறங்கி சிறுமிகள் விளையாடத் தொடங்கினர். அதை கண்ணம்மாள் கவனிக்காத நேரத்தில் சிறுமிகள் எதிர்பாராத விதமாக ஆழப் பகுதிக்கு சென்று தத்தளித்து கொண்டிருந்தனர். திடீரென மகள்கள் கதறவது கேட்டு பதறிப்போன கண்ணம்மாள் தண்ணீரில் அவர்கள் மூழ்குவது கண்டு அதிர்ச்சியடைந்து அலறினார்.
அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கதினர் சிறுமிகளை மீட்டு மணப்பாறையில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவலர்கள் சிறுமிகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. குளத்தில் மூழ்கி ஒரே நேரத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை உண்டாக்கி இருக்கிறது.