கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்ற இருசக்கர வாகனம்..! தடுப்பு கட்டையில் மோதி என்.ஐ.டி. மாணவி பரிதாப பலி..!
திருச்சி அருகே சாலையில் இருந்த தடுப்பு கட்டையில் மோதி என்.ஐ.டி. மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கேரள மாநிலம் திருக்கண்டியூரைச் சேர்ந்தவர் சுரேந்திரன். இவருடைய மகள் அஞ்சலி.(20). இவர் திருச்சியில் இருக்கும் என்.ஐ.டி.யில் உற்பத்தி பொறியியல் துறையில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். இவருடைய நண்பர் சாய்ராம்(23). சென்னையில் இருக்கும் வேளச்சேரி சேர்ந்த இவர் திருச்சி கே.கே நகரில் தங்கி உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரை பார்ப்பதற்காக அஞ்சலி மாலையில் கே.கே நகருக்கு சென்றுள்ளார். பிறகு இரவு உணவு உண்பதற்காக ஒரு இருசக்கர வாகனத்தில் கே.கே நகரில் இருந்து இருவரும் புறப்பட்டனர். வாகனத்தை அஞ்சலி ஓட்டி வந்ததாக தெரிகிறது.
திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் வந்துகொண்டிருந்தபோது திடீரென அது தன் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் சாலையில் தாறுமாறாக சென்ற இருசக்கர வாகனம் அங்கு இருந்த தடுப்பு கட்டையில் பயங்கரமாக மோதியது. அப்போது தடுப்பு கட்டையில் இருந்த ஒரு கம்பி அஞ்சலியின் தலையில் பலமாக தாக்கியது. இதனால் பலத்த காயம் அடைந்த அஞ்சலி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். சாய் சரண் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
உடனடியாக அஞ்சலியை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகே இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அஞ்சலி நேற்று முன்தினம் நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அஞ்சலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.