திருச்சி அருகே முத்தையம்பாளையம் கருப்பசாமி கோவில் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக 
உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் முத்தையாம்பாளையம் அருகே கருப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டும் நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

அப்போது முக்கிய நிகழ்வாக பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிடிக்காசை பிடிக்க முயற்சித்தனர். திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 போ் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 4 பேர் பெண்கள் மற்றும் 3 பேர் ஆண்கள் அடங்குவர். மேலும் 10 போ் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

போலீசார் போதிய பாதுகாப்பு வழங்காததே இந்த விபத்துக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடா்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.