மினிலாரி மீது கார் பயங்கர மோதல்.. அதிஷ்டவசமாக உயிர் தப்பிய திருச்சி மாவட்ட ஆட்சியர்..!
சேலத்தில் நடைபெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக கார் மூலம் சேலம் வந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருமணத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
திருமணத்திற்கு சென்று திரும்பிய போது திருச்சி மாவட்ட ஆட்சியர் கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிறிய காயங்களுடன் மாவட்ட ஆட்சியர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சேலத்தில் நடைபெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் திருமணத்தில் பங்கேற்பதற்காக கார் மூலம் சேலம் வந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, திருமணத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு சேலத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்த அன்சர்(32) என்பவர் நாமக்கலில் இருந்து சேலம் நோக்கி மினிலாரியை வேகமாக ஓட்டி வந்துள்ளார். அந்த நேரத்தில் சேலத்தில் கனமழை பெய்து கொண்டிருந்தது. மழையின் காரணமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய மினிலாரி, சென்டர் மீடியனில் மோதி, சாலையின் எதிர் திசையில் பாய்ந்து, தலைகீழாக கவிழ்ந்தது.
அப்போது மாவட்ட ஆட்சியரின் கார் எதிர்பாராதவிதமாக அந்த மினி லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது இந்த விபத்தில் மாவட்ட ஆட்சியர் சிவராசு சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கார் ஓட்டுனருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் சிவராசு, அதிகாரிகள் மற்றும் ஓட்டுநர் மற்றொரு காரில் சென்றனர். செல்லும் வழியில், மல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர், அவர்கள் திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.