மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவி உயிரிழப்பு... பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்..!
திருச்சியில் தனியார் பள்ளி மாடியில் இருந்து தவறி விழுந்த 7-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியில் தனியார் பள்ளி மாடியில் இருந்து தவறி விழுந்த 7-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி உறையூர் குழுமணி ரோடு டாக்கர் பங்களா பகுதியை சேர்ந்தவர் ராம் குமார், பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சங்கீதா. இவர் அட்டை பெட்டி மடிக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருந்தனர். இதில் மகன் கவுதம் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். மகள் இலக்கியா (13) அதே பகுதியில் உள்ள மெத்தடிக்ஸ் என்ற தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல பெற்றோரிடம் கூறிவிட்டு பள்ளிக்கு சென்றார். இவரது வகுப்பறை பள்ளியின் 2-வது மாடியில் உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது மாணவி இலக்கியா மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதை கண்ட மற்ற மாணவிகள் இதுபற்றி ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து மாணவி மாடியில் இருந்து விழுந்தவுடன், உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்காமல், பெற்றோர் வரும் வரை ஆசிரியர்கள் காத்திருந்ததால் மாணவி உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.