அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கித் தருவதாகவும்,  சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி,  இளம்பெண்களை ஏமாற்றி  பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுவந்த  நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.  திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ஜஹாங்கீர், மோசடி வேலைக்காக  தன்னுடைய பெயரை கார்த்திக் ரெட்டி என மாற்றிக் கொண்டுள்ளார். பெங்களூரு வணிக வளாகங்களில் பணிபுரியும் இளம் பெண்களை  அணுகும் இவர்,  அவர்களுடன் பேச்சுக் கொடுப்பது போல் கொடுத்து அவர்களுக்கு அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறுவார். 

பெண்கள் கொஞ்சம் மாநிறமாகவும்,  பார்ப்பதற்கு கொஞ்சம் அழகாகவும் இருந்தால் போதும், உடனே அவர்களை சினிமாவில் சேர்த்து விடுவதாக ஆசைவார்த்தை கூறுவார்.  அத்துடன் தான் எம்எல்ஏவின் மகன் என்றும்,  தன் தாயார் பிரபல மருத்துவர் என்றும் கூறி அவர்களை நம்ப வைப்பார். இவற்றையெல்லாம் நம்பும் பெண்கள் இடத்தில் நகை ,  பணம் உள்ளிட்டவற்றை  வாங்கிக்கொண்டு, வேலைக்காக சில விஐபிக்களை சந்திக்க வேண்டியுள்ளது, எனவே  நட்சத்திர விடுதிக்கு  வரவேண்டும் என கூறுவதுடன்,  தன்னுடன் கொஞ்ச நேரம் உல்லாசமாக இருந்தால் போதும், எனக் கூறுவார். அவரின் வார்த்தையை நம்பி பல பெண்கள் அவரது வலையில் விழுந்துள்ளனர். 

இதேபோல கடந்த சில ஆண்டுகளாக பல இளம்பெண்களை அவர் இவ்வாறு அனுபவித்துள்ளார் . அத்துடன் அந்த பெண்களிடம்  நகை பணம் உள்ளிட்டவைகளை ஏமாற்றி மோசடி உள்ளது தெரியவந்துள்ளது.  ஆனால்  பல பெண்கள் வெளியில் தாங்கள் ஏமார்ந்ததை வெளியில் சொல்ல தயங்கி கொண்டு புகார் அளிக்காமல் சென்றுள்ளனர் .   இதை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு இதில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார் .  பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கேற்ப கார்த்திக் ரெட்டி தன்னிடம் ஆசைவார்த்தை கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் நகை பணம் உள்ளிட்டவை ஏமாற்றிவிட்டார் என பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில்,  கார்த்திக் ரெட்டி என்கின்ற போர்வையில் இருந்த ஜஹாங்கீரின்,  சல்லாப லீலைகள் வெளியில் தெரியவந்தது  பெண்களிடம் பறிக்கப்பட்ட பணம் நகைகளை வைத்து கார், வீடு என அவர் சொகுசாக வலம் வந்துள்ளார்.  அவர் இப்படி பேசி இன்னும் எத்தனை பெண்களின் வாழ்க்கையை சீரழித்தாரோ என  வழக்கை விசாரிக்கும் போலீஸார் தலையில் அடித்துக் கொள்கின்றனர்.