திருச்சியைச் சேர்ந்தவர் முருகன்(50). சமயபுரத்தில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வழிப்பறி சம்பந்தமாக முருகனை கைது செய்து அழைத்து சென்றனர். விசாரணை கைதியாக இருந்த முருகன் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணமடைந்ததாக காவல்நிலையத்தில் இருந்து அவரின் குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதறி துடித்தனர்.

முருகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரின் உறவினர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முருகனின் மகன் வீரமணி, காவல்துறையினர் தான் தனது தந்தையை துன்புறுத்தி கொலை செய்துள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார். போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை முருகனின் உடலை வாங்க மறுத்து அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சம்பவ இடத்திற்கு காவல்துறைக்கு உயரதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சமபந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக 3 காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.