திமுக கூட்டணியில் திருச்சி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியைப் பெறுவதில் கடைசி நேரத்தில் திமுக கடும் முயற்சி செய்தது. ஆனால், திருச்சி தொகுதியை காங்கிரஸ் மேலிடமே விரும்பி கேட்டதால்,  திருச்சி தொகுதியை அக்கட்சிக்கு திமுக விட்டுக்கொடுத்தது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 
தொடக்கம் முதலே திருச்சியில் போட்டியிட காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் காய் நகர்த்திவருகிறார். திருநாவுக்கரசரின் சொந்த மாவட்டமான புதுக்கோட்டையில் உள்ள புதுக்கோட்டை, கந்தவர்க்கோட்டை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் வருவதால், இந்தத் தொகுதியின் மீது அவருக்கு கண் இருந்தது. மாறாக அவருடைய சொந்த ஊரான அறந்தாங்கி தொகுதி ராமநாதபுரத்தில் இருந்தபோதும், இரண்டு முறை அந்தத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்ததால், இந்த முறை திருநாவுக்கரசரின் பார்வை திருச்சி பக்கம் திரும்பிவிட்டது.
இதற்கிடையே திருச்சியில் காங்கிரஸ் சார்பில் 4 முறை வெற்றி பெற்று எம்.பி.யாக இருந்த அடைக்கலராஜின் மகன் ஜோசப் லூயிஸும் திருச்சி தொகுதியைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளார். திருச்சி சீட்டைப் பெறுவதற்காக ஜோசப் லுாயிஸ் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக டெல்லியில் முகாமிட்டுள்ளார். இருந்தபோதும் திருச்சி தொகுதி அரசருக்கே கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். 
இந்நிலையில் அரசர் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று வைக்கும் வாதத்தை முறியடிக்கும் வகையில் திருச்சி மத்திய பகுதியில் சகல வசதிகளுடன் வீடு பார்க்கும் பணியை அவரது ஆதரவாளர்கள் தொடங்கியுள்ளார்கள். வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பே, திருச்சியில் வீடு பார்த்து குடியேற திருநாவுக்கரசர் திட்டமிட்டுள்ளார்.