குழந்தையை மீட்பதில் குறுக்கே நின்ற பாறை... 30 அடியில் சுர்ஜித்துக்கு வந்த சோதனை..!
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்பதில் 30 அடியில் பாறை குறுக்கே இருந்ததால் சிக்கல் 21 மணி நேரமாக நீடித்து வருகிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். பெற்றோரின் சொந்த இடத்தில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி 21 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை சுர்ஜித் 70 அடிக்கு சென்றுவிட்ட நிலையில் மீட்புப்பணி தொடர்கிறது. இடுக்கி போன்ற கருவியில் கேமராவை பொறுத்தி குழந்தையை கண்காணித்து வருகின்றனர். இடுக்கி போன்ற கருவியை கொண்டு குழந்தையை மீட்க முடியாததால் பக்கவாட்டில் தோண்டி குழந்தையை மீட்கும் பணி தொடங்கி உள்ளது.
குழந்தை 30 அடியில் இருக்கும்போதே பக்கவாட்டில் தோண்டி குழந்தையை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் 30 அடியில் பாறை இருப்பதால் அந்த முயற்சி தோல்வி அடைந்து விட்டது. பாறை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் குழந்தை சுர்ஜித் மீட்கப்பட்டு இருக்கலாம் என மீட்புக் குழுவினர் கூறுகின்றனர். தற்போது 70 அடியில் குழந்தை சிக்கிக் கொண்டுள்ளது. குழந்தையை மீட்க 10க்கும் மேற்பட்ட குழுவினர் போராடி வருகின்றனர். குழந்தைக்கு கருவிகள் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.