60 மணி நேரத்தை கடந்தது..! குழந்தை சுர்ஜித்திற்காக ஏக்கத்தோடு காத்திருக்கும் தமிழகம்..!
ராட்சத இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பள்ளம் தோண்டும் பணி நேற்றிலிருந்து நடந்து வருகிறது. கடினமான பாறைகள் இருப்பதால் இயந்திரங்கள் பழுதாகி பணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனினும் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் மீட்பு படையினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ. இவரது மனைவி கலாமேரி. இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் சுஜித் என்கிற மகன் இருக்கிறான். கடந்த வெள்ளிக்கிழமை வீட்டின் அருகே இருக்கும் ஆழ்துளைக்கிணற்றில் குழந்தை சுஜித் தவறி விழுந்துள்ளான். விரைந்து வந்த தீயணைப்பு படையினர் குழந்தையை மீட்க தீவிரமாக போராடி வந்தனர். பின்னர் மாநில பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் மூலமாக குழந்தை சுர்ஜித்தை பத்திரமாக வெளியே கொண்டுவர தீவிர முயற்சிகள் நடக்கிறது.
25 ம் தேதி தொடங்கிய மீட்பு பணி 60 மணி நேரம் கடந்தும் தீவிரமாக நடந்து வருகிறது. முதலில் 30 அடி ஆழத்தில் இருந்த குழந்தை பின்னர் 70 அடிக்கு சென்று தற்போது 88 அடியில் ஏர் லாக் மூலம் குழந்தையின் கை பிடித்து வைக்கப்பட்டுள்ளது. தேசிய மீட்புப்படையினர் சனிக்கிழமை முதல் முயன்று வருகின்றனர். ராட்சத இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பள்ளம் தோண்டும் பணி நேற்றிலிருந்து நடந்து வருகிறது. கடினமான பாறைகள் இருப்பதால் இயந்திரங்கள் பழுதாகி பணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனினும் ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் மீட்பு படையினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.
சனிக்கிழமை காலை 5 மணி வரையிலும் குழந்தையின் அழுகுரல் கேட்டதாகவும் அதன் பின்னர் சத்தம் எதுவும் வரவில்லை என்று அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்திருந்தார்.இந்தநிலையில் குழந்தை மயக்க நிலையில் இருக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் குழந்தைக்கு தொடர்ந்து ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.