Asianet News TamilAsianet News Tamil

தவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழப்பு? மருத்துவரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்

திருச்சியில் மருத்துவரின் தவறான சிகிச்சையால் இளம் பெண் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

The relatives of the young women protest in Trichy accusing wrong treatment by the doctors
Author
First Published Aug 26, 2023, 3:00 PM IST

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அடுத்துள்ள திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மதன். இவரது மனைவி ரேணுகா. இவர்களது மகள் ரூபசௌவுந்தரி (வயது 20). இவருக்கு காதில் ஏற்பட்ட ஓட்டையின் காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு வலது காதில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து தற்போது இடது காது பகுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள மருத்துவர் ஜானகிராம் என்பவரது மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

கடந்த 11ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என மருத்துவர் தெரிவித்து அன்று காலை 9 மணி அளவில் அறுவை சிகிச்சைக்கான அரங்கிற்கு ரூபசௌவுந்தரியை மருத்துவர்கள் அழைத்துச் சென்றனர். ஆனால் சிறிது நேரம் கழித்து அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக உடனடியாக அருகில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர். 

திமுகவின் தங்க தமிழ்செல்வனை வீட்டிற்கே நேரில் சென்று சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்

இதனைத் தொடர்ந்து ரூபசௌந்தரியை அருகில் உள்ள இருதய சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தற்பொழுது காப்பாற்றுவது கடினம் என கூறிவிட்டு தங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரூபசௌவுந்தரி உயிரிழந்தார். 

இதன் காரணமாக ஆத்திரமடைந்த உறவினர்கள் தவறான சிகிச்சை அளித்ததால் தான் மரணம் ஏற்பட்டது எனவே உடனடியாக தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் ஜானகிராமை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ரூபசௌவுந்தரியின் உறவினர்கள் மற்றும் தொழிலாளி ஐக்கிய முன்னணி, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென திருச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவல்துறை துணை ஆணையர் அன்பு மற்றும் காவல்துறையினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

முதல்வரின் பாதுகாப்பிற்காக சென்ற ஆம்புலன்ஸ்? அரசு நடத்திய போட்டியில் மயங்கி விழுந்த மாணவன் பலி

ஆனால் உரிய நீதி கிடைக்க வேண்டும், மருத்துவர் ஜானகிராமன் கைது செய்யப்பட வேண்டும். உயிரிழந்த இளம் பெண்ணின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அரசு மருத்துவமனை சாலையில் பரபரப்பு ஏற்பட்டு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினர்.

Follow Us:
Download App:
  • android
  • ios