நாட்டின் 71வது குடியரசு தின விழா நாடு முழுவதும் நாளை உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியில் குடியரசு தலைவர் தேசிய கொடி ஏற்றுகிறார். அதே போல அந்தந்த மாநிலங்களில் ஆளுநர்கள் கொடி ஏற்றுகின்றனர். இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை மதுபான கடைகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டியுள்ள மதுபான பார்கள், நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள பார்கள் அனைத்தும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை  முன்னிட்டு மூடி வைக்க வேண்டும் என்றும் அன்று மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல், அன்றைய தினத்தில் டாஸ்மாக் மதுபான கூடங்கள் திறக்கப்பட்டிருந்தாலோ, பார்களில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தாலோ, மதுபான பார் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Also Read:  'ஒரு நாள் தலைமையாசிரியர்'..! அதிரடி காட்டி அசத்திய அரசு பள்ளி மாணவி..!