44 நாட்கள் விரதத்தை முடிக்க தயாரான குடிமகன்கள்..! இன்று டாஸ்மாக் திறப்பு..!
பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகள் திறக்கப்பட்ட போதும் 44 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் திறக்கப்படுவதால் குடிமகன்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் அசுர வேகம் எடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவில் 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாட்டில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நோய் தொற்று அதிகம் இருக்கும் பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்பட மாட்டாது எனவும், கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வெளியே உள்ள மதுபானக்கடைகள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு திறக்கப்படும் எனவும் தமிழக அரசு கூறியிருந்தது. அதன்படி தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் தலைநகர் சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்பட மாட்டாது என அரசு தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் 711 இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் திறக்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
டாஸ்மாக்கில் 2 போலீசார், ஊர்க்காவல் படையினர், தன்னார்வலர்கள் ஆகியோரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் விதமாக வயது அடிப்படையில் நேரம் நிர்ணயிக்கப்பட்டு மதுபானம் விற்பனை செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 50-வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மது வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 40-50 வயதிற்குள் இருப்பவர்களுக்கு 1 மணி முதல் 3 மணி வரையிலும் 40 வயதிற்குட்பட்டவர்களுக்கு மாலை 3 மணி முதல் 5 மணி வரை விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் டோக்கன் பெற்றுக்கொண்டு அதில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே மது வாங்க வேண்டும் என்றும் அடையாள அட்டை கொண்டு வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகள் திறக்கப்பட்ட போதும் 44 நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் திறக்கப்படுவதால் குடிமகன்கள் உற்சாகத்தில் உள்ளனர். எனினும் மதுக்கடைகள் திறப்பது கொரோனா வைரஸ் பரவுதலை மேலும் அதிகரிக்கும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.