இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் அசுர வேகம் எடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,674 ஆக உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாட்டில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மே 7ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டன. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்படும் என அரசு அறிவித்திந்திருந்தது.

கொரோனா பரவுதல் அதிகரித்து வரும் சூழலில் டாஸ்மாக் கடைகளை திறப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து டாஸ்மாக் மூடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் விசாரணைகள் நடந்து வருகிறது.

வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை இன்று நடைபெறும் என ஒத்திவைத்தனர். இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படாத நிலையில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க அரசு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். மேலும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு டாஸ்மாக் வருவாய் முக்கிய பங்கு வகிப்பதாக கூறிய அரசு வழக்கறிஞர், டாஸ்மாக்கிற்கு பதில் பிற துறைகள் மூலம் இந்த வருவாயை உருவாக்க 4 - 5 ஆண்டுகள் ஆகும் என தெரிவித்தார். தொடர்ந்து வாதம் நடைபெற்ற பிறகு வழக்கு விசாரணை திங்கள்கிழமையும் நடைபெறும் என நீதிபதிகள் அறிவித்தனர்.