1000 கிலோமீட்டர்..! மும்பையில் இருந்து நடந்தே வந்த தமிழக வாலிபர்கள்..!
பட்டதாரி வாலிபர்களான இவர்கள் அனைவரும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தங்கள் சொந்த ஊருக்கு வந்து பெற்றோரை பார்த்து செல்வது வழக்கம். இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் இளைஞர்கள் பணியாற்றிவந்த நிறுவனமும் மூடப்பட்டது.
உலக அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருவதை தடுக்கும் விதமாக 21 நாட்கள் ஊரடங்கு நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடைகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கி இருக்க அரசு அறிவுறுத்தி இருக்கிறது. வெளிமாநிலங்களில் பணியாற்றிவந்த தொழிலாளர்கள் பலர் தங்குமிடம், உணவு போன்ற பிரச்சினைகள் காரணமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்கின்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில் தமிழகத்தை சேர்ந்த 7 வாலிபர்கள் மும்பையில் பணியாற்றி வந்த நிலையில் ஊரடங்கு காரணமாக நடந்தே தங்கள் கிராமங்களுக்கு வந்துள்ளனர். நாகை மற்றும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 22 பேர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருக்கும் வேளாண் உபகரணங்கள் மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். பட்டதாரி வாலிபர்களான இவர்கள் அனைவரும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தங்கள் சொந்த ஊருக்கு வந்து பெற்றோரை பார்த்து செல்வது வழக்கம். இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் இளைஞர்கள் பணியாற்றிவந்த நிறுவனமும் மூடப்பட்டது.
இதனால் ஊரில் இருக்கும் அவர்களது பெற்றோர் பதறிப்போய் இளைஞர்களை உடனடியாக கிளம்பி வருமாறு கூறி உள்ளனர். ஆனால் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டதால் வழி இன்றி தவித்த இளைஞர்கள் சொந்த ஊருக்கே நடந்து செல்ல முடிவெடுத்தனர். 22 பேரில் 7 பேர் மட்டும் துணிச்சலாக கிடைத்த உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை எடுத்துக் கொண்டு கடந்த 29ஆம் தேதி சோலாப்பூரில் இருந்து தங்கள் ஊர்களுக்கு நடந்து செல்ல புறப்பட்டனர். வழியில் வரும் சரக்கு வாகனங்களில் சில கிலோமீட்டர் லிப்ட் கேட்டு மாறி மாறி வந்திருக்கின்றனர்.
இவ்வாறாக மும்பையிலிருந்து கர்நாடக வழியாக 7 நாட்கள் நடந்து நேற்று முன்தினம் மாலையில் திருச்சி மாவட்டம் முசிறியை வந்தடைந்தனர். அங்கு சமூக ஆர்வலர் ஒருவர் மூலமாக திருச்சி மாவட்ட கலெக்டருக்கு இளைஞர்கள் நடந்து வந்தது குறித்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து துரித நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் ஏழு பேருக்கும் சொந்த ஊருக்கு செல்ல வாகன வசதியும் பயணம் செய்ய அனுமதி சீட்டும் வழங்கி ஏற்பாடு செய்தார். பின் இளைஞர்கள் தங்கள் ஊர்களுக்கு சென்றடைந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நாமக்கல்லை சேர்ந்த வாலிபர் ஒருவர் நாக்பூரில் இருந்து நடந்து வரும்போது தெலுங்கானாவில் பலியானது குறிப்பிடத்தக்கது.